சாய் தியானாலயா ஆத்ம ஞான பீடத்தின் “சாய் சங்கமம்”

சாய் தியானாலயா ஆத்ம ஞான பீடத்தின் “சாய் சங்கமம்”

சாய் தியானாலயா ஆத்ம ஞான பீடத்தின்
“சாய் சங்கமம்”

சாய்தாசன் கோபால்.

சாய் தியானாலயா ஆத்ம ஞான பீடத்தின் சார்பில், யோகி ஶ்ரீராம் பாபா அவர்களின் வழிகாட்டுதலின்படி சென்ற 12.10.25 ஞாயிறு அன்று தர்ம மிகு சென்னை அயனாவரத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. “சாய் சங்கமம்” நிகழ்ச்சி 

 “சங்கமம்” என்றாலே நமது நினைவிற்கு வருவது புனித நதிகளான கங்கை, யமுனை, சரஸ்வதி சங்கமமாகும் இடமாகும். ஶ்ரீ சாய்பாபாவின் பெரும் அடியாரான தாஸ்கணு மகராஜ் அவர்கள் புண்ணிய ஸ்நானத்திற்காக திரிவேணி சங்கமம் போக வேண்டுமென்று நினைத்து பாபாவிடம் அனுமதி வேண்டியுள்ளார். “பாபா அவரிடம் அவ்வளவு தூரம் போக வேண்டிய அவசியமில்லை பிரயாகை இங்கேயே இருக்கிறது என்னை நம்பு” என்றார். 

அப்போது ஆச்சரியத்திலும் ஆச்சரியம் தாஸ்கணு அவர்கள் தனது தலையை பாபாவின் பாதங்களில் வைத்ததும் புண்ணிய நதிகளின் புனித நீர் பாபாவின் இரண்டு கால் கட்டை விரல்களில் இருந்து சீராக வெளிப்பட்டது. இவ்வாச்சரியத்தை கண்ட தாஸ்கணு அவர்கள் ஆழ்ந்த மரியாதை உணர்ச்சியால் பெரிதும் கவரப்பட்டார்.

ஆனால் இந்த சாய் சங்கமம் முற்றிலும் மாறுபட்டது. யோகி ஶ்ரீராம் பாபா அவர்களின் அனைத்து வேண்டுதல்களையும் ஶ்ரீ சாய்பாபா நிறைவேற்றி வருகிறார். மக்களின் சுபிட்ச வாழ்வுக்கு ஏதாவது செய்ய வேண்டுமென யோகி ஶ்ரீராம் பாபா அவர்கள் நினைத்து, பாபாவிடம் வேண்டுதல் செய்தார். வேண்டுவோர்க்கு வேண்டும் வரம் தரும் கலியுக தெய்வம் ஶ்ரீ சாய்பாபா அவர்கள் உனது எண்ணப்படியே எல்லாம் நன்றாகவே நடக்கும் என்று அருளாசி வழங்கினார்கள். 

அதன்படி 1.சாய் பஜன் 2. திருவிளக்கு பூஜை 3. பிரார்த்தனை 4. ஹோமம் 5.தியானம், 6. அன்னதானம் என்று சாய் சங்கமம் உருவானது. சாய் பஜன் என்றாலே பாபாவுக்கு மிகவும் பிடித்தமானது. செல்வி.அமிர்தா, திருமதி.ஜெயலட்சுமி  குழுவினர் இறை வணக்கத்துடன் பஜன் பாடல்களை மிகச் சிறப்பாக பாடினார்கள். பாபாவே ஆடிப்பாடி பக்தர்களை பரவசப்படுத்தியது
நம் நினைவிற்கு வந்து போனது.

ஜோதி ரூபத்தில் தெய்வங்களை ஆராதனை செய்வது. வள்ளல் பெருமானே! அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி என்று அருள் பாலித்துள்ளார். ஜோதி மூலமாக அனைத்து செல்வங்களையும் பெற்று வாழ்வில் மேன்மையடைவதே  விளக்கு பூஜையின் தத்துவம். வேத விற்பன்னர் திரு. இராகவேந்திரன் அவர்கள் மூல மந்திரங்களை சொல்லி ஜோதியை ஆராதனை செய்தார்.

“பொன்னும் மெய்ப்பொருளும் தருவாய் போற்றி.. என்று ஆரம்பித்து, அளவிலாச் செல்வம் தருவாய் போற்றி! ஆனந்த அறிவோளி விளக்கே போற்றி! போற்றி! என்று திருவிளக்கு பூஜையை சிறப்பாக முடித்தார். விளக்கு பூஜை முடிந்த கையோடு, யோகி ஸ்ரீராம் பாபா அவர்கள் ஜோதி தியானத்தை ஆரம்பித்தார். எங்கும் காணாத ஓர் தியானத்தை பக்தர்களை செய்ய வைத்தார்.

திருவிளக்கு பூஜைக்காக ஏற்றப்பட்ட ஜோதியை அனைக்காமல் அதனையே உற்று நோக்கச்செய்து சில நிமிடங்கள் கழித்து கண்களை மூடச்செய்து இரு புருவ மத்தியில் ஜோதியை தோன்றச்செய்து அப்படியே ஜோதி தியானத்ததிற்கு இட்டுச்சென்றார்.

இருபது நிமிட தியானத்திற்குப்பின் பக்தர்கள் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். அனைவரும் தனது இரு புருவ மத்தியில் மகாலட்சுமியை கண்டதாக தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து பிரார்த்தனை நிகழ்ச்சி நடந்தது

யோகி ஶ்ரீராம் பாபா அவர்கள், பக்தர்கள் மனதில் பதியும்படி அமைதியாக சாயின் அருளினை வாரி வழங்கி அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்தார்கள். பிரார்த்தனையின் தொடக்கத்திலேயே ஸ்ரீராம் பாபா அவர்கள் மிகச்சரியாக 11 மணியில் இருந்து 1 மணிக்குள் தனது தாய் ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன் அவர்கள் ஹோமத்தில் எழுந்தருளி பக்தர்களை ஆசீர்வதிப்பதாக தனக்கு வாக்கு அளித்திருப்பதாக கூறினார். 

அவர் கூறியபடி ஹோமம் ஆரம்பித்த 11 மணிக்கும் ஹோமம் முடியும் 1 மணிக்கும் ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன் மாரியாக ( மழையாக)  பொழிந்து பக்தர்களை ஆசீர்வதித்தார்கள் பக்தர்களும் பரம திருப்தி அடைந்தார்கள்.

சுதர்ஸன ஹோமத்தை பெரும்பாலும் கோவில்களில் தான் செய்வார்கள். புரட்டாசி மாதம் சுதர்ஸன ஹோமம் செய்வது மிகச் சிறப்பு. மூலிகை திரவியங்களால் ஹோமங்கள் செய்வதால், வாழ்க்கை வளமாகும். ஹோமப் புகையை சுவாசிப்பதால் சில நோய்கள் குணமாகியுள்ளதாக சொல்கிறார்கள். ஆண்டாள் அருளிய திருப்பாவையில் 5-வது பாட்டில் “வாயினால் பாடி, மனதினால் சிந்திக்க போய பிழையும் புகுதருவான் நின்றனவும், தீயினால் தூசாகும் செப்பேலோ ரெம்பாவாய்” என்று பாடியருளிச் செய்துள்ளார்கள்.

வேத விற்பன்னர் ராகவேந்திரன் அவர்கள் மூல மந்திரங்களை ஜெபிக்க, வருகை தந்த பக்தர்களும் திரும்பச் சொன்னார்கள். “ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் கிருஷ்ணாய கோவிந்தாய, என்று ஆரம்பித்து, ஓம் சுதர்சனாய வித்மஹே! மஹராஜ்வாலாய தீமஹி தன்னஸ் சக்ர ப்ரசோதயாத்! ஶ்ரீசக்ர ராஜாய மங்களம்” என்று முடித்தார். ஓம் என்ற பிரணவத்தின் ஒலி அனைத்து உள்ளங்களிலும் நிறைந்தது. 

யோகி ஶ்ரீராம் பாபாவுக்கும், மந்த்ராலய மகான் ஶ்ரீ ராகவேந்திர சுவாமிகளுக்கும் ஏதோ ஒரு புண்ணிய தொடர்பு இருக்கும் போல் தெரிகிறது. மகான் ஶ்ரீ ராகவேந்திர சுவாமிகளும், யோகி ஶ்ரீராம் பாபாவும் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் வாழ்ந்தவர்கள். வேதவிற்பன்னர் இராகவேந்திரன் அவர்கள் ஹோம பூஜையை செய்தது ஶ்ரீ ராகவேந்திர சுவாமிகளே பூஜையை செய்தது போல் ஒரு உணர்வு. ஏனென்றால், ராகவேந்திரன் அவர்கள் ஹோம விதையை போட்டார்கள். ஶ்ரீராம் பாபா அவர்கள் அதை கற்பக விருட்சமாக வளர்த்துவிட்டார்கள்.

பசித்தோருக்கும், இயலாதோருக்கும், இல்லாதோருக்கும் அன்னதானம் செய்வது புண்ணியம் மட்டுமல்ல, கர்ம வினையும் தீரும் என்று ஶ்ரீ சாயிபாபாவே கூறியுள்ளார்கள். “அன்னமே பிரம்மம் என்ற சாயி மந்திரம்! அன்னதானம் செய்வோருக்கு சாயி என்றும் அட்ஷய பாத்திரம்” என்பது சத்திய மொழி. ஹோமத்தில் கலந்து கொண்டவர்களுக்கும், பக்தர்களுக்கும் சிறப்பான அறுசுவை உணவு வழங்கப்பட்டது.

“யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” இது திருமூலர் வாக்கு. ஶ்ரீராம் பாபா அவர்கள் கலியுக தெய்வம் ஶ்ரீ சாய்பாபாவின் வாக்கினை சிரமேற்கொண்டு அனைவரும் வறுமை நீங்கி வளம் பெறவும்! நோய்கள் நீங்கி நலம் பெறவும்! இன்னல்கள் நீங்கி இன்பம் பெறவும்! தனது சற்குரு ஸ்ரீ சாயி பாபாவின் சிந்தனையில் மனதை ஈடுபடுத்தி அனைவரும் பிறவிக்கடல் நீந்த இந்த அரிய செயலான “சாய் சங்கமம்” என்ற புண்ணிய காரியத்தை யோகி ஶ்ரீராம் பாபா அவர்கள் சாதித்துள்ளார்கள்.

பூர்வ ஜென்ம புண்ணியங்கள் இருந்தால் தான் இது போன்ற தர்ம காரியங்கள் செய்ய முடியும் என்பது ஆன்றோர் வாக்கு. யோகி. ஸ்ரீராம் பாபா அவர்கள் தனது பூர்வ ஜென்ம புண்ணியத்துடன் சிறப்பாக செயல்பட்டு, சாய் சங்கமம் நிகழ்ச்சியினை வடிவமைத்து முன்நின்று மிகச்சிறப்பாக நடத்தியமைக்காக  மூத்த குடிமகன் என்ற முறையில் வாழ்த்தி மகிழ்கின்றேன்.

ஶ்ரீ சாயியை பணிக!
அனைவருக்கும் அமைதி நிலவட்டும்! 

********