கால நாயகன்
கால நாயகன்
சொ.அகஸ்டின்
காலம் பொன் போன்றது ! ஆனால் நம் குரு காலம் பொன்னை விட உயர்ந்தது என்பார். எல்லா மாற்றங்களுக்கும் பொதுவான ஒரே அச்சாணி காலம் மட்டும் தான். கடந்து சென்ற காலத்தை அறிவியலோடும் ஆன்மீகத்தோடும் ஒப்பிட்டு பார்த்த மகான்கள் பிரபஞ்சம் எவ்வாறு தோன்றியது என்பதை அறிந்து கொண்டார்கள். ஆகவே அவர்கள் காலத்தோடு தன்னை இணைத்துக் கொண்டு நிகழ்காலத்திலேயே வாழ்ந்தார்கள்.
இதன் மூலம் வானியல் மாற்றங்களை உணர்ந்து இனி வரும் காலங்களில் நமது பாதை எவ்வாறு இருக்கும் அதில் எவ்வாறு பயணிக்கவேண்டும் என்பதை பதிவு செய்து வைத்தார்கள். அப்பதிவினை பின்பற்றி அடுத்தடுத்து வந்த மகான்கள் காலத்திற்கேற்றார் போல் இலகுவாக்கி வானியலோடு வாழ்வியலை பொருத்தி பார்க்கும் பக்குவத்தை மக்களிடையே போதித்து வந்தார்கள் .
ஆனால் விஞ்ஞானிகள் காலத்தை அறிவியல் கண்கொண்டு கணித்தார்கள் இதன் விளைவால் காலத்தில் இருந்து நேரத்தை உருவாக்கி அந்நேரத்தை மையப்படுத்தியே அனைத்தையும் கண்டுபிடிந்தார்கள். அதன் பொருட்டு மனிதயினம் மட்டும் நேரத்திற்க்குள் தன்னை சுருக்கிக் கொண்டு மனம் விரிவடையாமல் உலகியலோடு பயணப்படுவதையே பழக்கப்படுத்திக் கொண்டார்கள்.
அதிலிருந்து விஞ்ஞானி மட்டும் காலத்தோடு பயணப்பட்டு வானியல் மாற்றங்களை கண்டுபிடித்தாலும் ஆதாரத்தை உருவாக்குவதற்குள் காலம் பல்வேறு மாற்றங்களை நிகழ்த்தி விடுகிறது . இதனால் விஞ்ஞானியாலும் நிகழ்காலத்தில் பயணிக்க முடியாத சூழலில் சிக்கிக்கொள்கிறார் .
இதனை அறிந்துதான் மகான்கள் வானியல் மாற்றங்களோடு இணைந்து செயலாற்றினார்கள் அதனால் தான் அவர்களால் நிகழ்காலத்திலேயே பயணிக்க முடிகிறது. ஆகவே மெய்ஞானி விஞ்ஞானிக்கு எப்போதும் எட்டா கனியாகவே திகழ்கிறார்கள் அவ்வாறு வந்த மெய்ஞானிகளில் ‘பகவான் சாய்நாதர்’ ஆசியால் வளர்த்தெடுக்கப்பட்ட மக்களோடு மக்களாக பயணிக்கும் நம்குரு ‘யோகி ஸ்ரீராம் பாபா’ அவர்கள் நிகழ்காலத்திலேயே தன்னை நிலை நிறுத்தி ‘காலத்தோடு’ இணைந்து கால நாயகனாக வெளிப்பட்ட நிகழ்வினை தங்களிடத்தில் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
கடந்த 2022 ஆம் வருடம் ஜூலை மாதம் 13 ஆம் தேதி நமது குருநாதர் ஏற்பாடு செய்திருந்த ஷீரடி புனித யாத்திரையில் கலந்துக் கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிட்டியது. அப்பயணத்தில் மொத்தம் 36 நபர்கள் கலந்துக்கொண்டனர். காலை 10.20 மணிக்கு இரயில் புறப்படும் நேரம் என்பதால் அனைவரையும் 9.00 மணிக்கெல்லாம் சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்திற்க்கு வரும்படி குரு கூறியிருந்தார். ஆனால் நாங்கள் நேரத்தை மையப்படுத்தி செயல்பட்டதால் 9.00 மணி முதல் 10.15 வரை ஒவ்வொரு நபர்களாக வந்துக்கொண்டே இருந்தோம்.
ஏனென்றால் இரயில் புறப்படும் நேரம் 10.20 மணிதானே என்ற சிந்தை ஒவ்வொரு நபருக்குள்ளும் பதிந்துவிட்டது. ஆனால் நம்குருவோ காலத்தோடு இணைந்து செயல்பட்டதால் முதல் ஆளாக இரயில் நிலையத்திற்கு வந்து எங்கள் அனைவரையும் இன்முகத்துடன் வரவேற்றார். மேலும் அவர் கூறினார் ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்து வைப்பதற்க்காகவே உங்கள் அனைவரையும் 9.00 மணிக்கு வரும்படி கூறியிருந்தேன் ஆனால் அனைவரும் காலம் தள்ளி வந்ததால் அம்மாதிரி செய்யமுடியாமல் போயிற்று.
எனவே காலத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று கூறி அவரவர் இருக்கையில் அமரச்செய்தார். சரியாக 10.20 மணிக்கு புறப்பட்ட. இரயில் மறுநாள் காலை 10.00 மணிக்கு ஷீரடி சாய்நகர் இரயில் நிலையம் சென்றடைந்தது. அங்கிருந்து ஆட்டோக்கள் மூலமாக தங்கும் விடுதிக்கு சென்றோம். சிறிது ஓய்விற்கு பிறகு குரு அவர்கள், அனைவரையும் சாய் மந்திர்க்கு அழைத்துச்சென்றார் பகவான் சாய்நாதரை மனதார தரிசித்து விட்டு தங்கும் அறைக்கு திரும்பினோம்.
மறுநாள் காலை 5.00 மணிக்கெல்லாம் ஹோட்டல் வளாகத்தில் வந்துவிடுங்கள் இங்கிருந்து மூன்று கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் பாபாவின் சீடரான சிவநேசன் மந்திர்க்கு செல்லவேண்டும் என்று கூறி அனைவரையும் அவரவர் அறைக்குச் சென்று ஒய்வெடுத்துக் கொள்ளும்படி கூறினார்.
அதன்படி விடியற்காலை 5.00 மணிக்கு ஒன்றிணைந்து நடை பயணமாக புறப்பட்டோம் சுமார் 500 மீட்டர் கடந்து இருப்போம் அப்போது எங்கிருந்தோ வந்த ஒரு பைரவர் எங்களுடன் இணைந்து கொண்டது. பார்ப்பதற்கு சாதுவாக இருந்தது அந்த பைரவர். உடன் பயணித்தவர்கள் அதற்கு பிஸ்கட், ரொட்டி என ஒவ்வொன்றாக வாங்கி கொடுத்தனர் ஆனால் அந்த பைரவர் எதையும் சாப்பிடாமல் எங்களுடன் மூன்று கி.மீ பயணம் செய்து சிவநேசன் சமாதி மந்திருக்கு வந்தது.
அதுவரை எங்களது நடவடிக்கையை கவனித்துவந்த குரு கூறினார் நீங்கள் எது கொடுத்தாலும் அது சாப்பிடாது ஏனென்றால் அது கால பைரவர். அவர்கள் வந்த வேலையை மட்டுமே பார்ப்பார்கள். இன்னும் சற்று நேரத்தில் தியானம் தொடங்கும். எவரும் இடையில் கண்விழிக்க கூடாது அப்பொழுது இங்கே இன்னொரு பைரவரும் வருவார். எனவே அவர்கள் அவர்களது வேலையைச் செய்வார்கள். நீங்களும் உங்களது வேலையான தியானத்தை காலத்தோடு இணைந்து செய்யுங்கள் என்றார்.
குரு சொன்னது போலவே தியானத்தின் போது இரண்டு பைரவர்கள் வந்ததும் தியானித்தவர்களின் உச்சந்தலையில் தன் நாவால் தடவிக்கொடுத்ததும் என பல்வேறு நிகழ்வுகள் நடந்ததை உணர்ந்து அனைவரும் ஆச்சர்யப்பட்டனர். தியானம் முடிந்து மீண்டும் எங்களுடன் பயணப்பட்ட பைரவர்கள் இடையில் திடீரென மறைந்தார்கள். பைரவர்கள் வந்தார்கள், சென்றார்கள் அவர்கள் ஏன் வந்தார்கள்? என்ன செய்தார்கள்? எங்கு சென்றார்கள்? இவை அனைத்தும் காலத்தோடு பயணப்படும் குருவிற்கு மட்டுமே விளங்கும்.
மறுநாள் காலை சிற்றுண்டி முடிந்ததும் 8.00 மணியளவில் எல்லோரா குகை கோவிலுக்கு பேருந்தில் புறப்பட்டோம் . பயண தூரம் அதிகம் என்பதால் கலைப்பு தீர 10.00 மணிக்கு கரும்புச்சாறு வழங்கப்பட்டது . சிறிது நேரத்தில் அனைவரையும் கண்காணித்த நம்குரு அவர்களை உற்சாகப்படுத்த சத்சங்கத்தை ஆரம்பித்தார். இப்படியே சென்ற உரையாடல் ஒருகட்டத்தில் கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற கேள்வி வந்தது இருந்தால் காட்ட முடியுமா என்றும் கேட்டனர்.
குரு அவர்கள் சற்றும் மனம் தளராமல் உங்கள் கடவுளை காட்ட நான் தயார் யாரை காட்ட வேண்டும் என்று நீங்களே சொல்லுங்கள் என்றார். இப்படி ஒரு பதிலை எவரும் எதிர்பார்க்கவில்லை. உடனே யாத்திரீகர்களும் சற்றும் சலைக்காமல் ஆளுக்கொரு கடவுள் பெயரை கூறினார்கள் ஓட்டுனர் அருகே அமர்ந்து கேட்டுக்கொண்டிருந்த என் பார்வைக்கு இது வாதமாக தெரிந்தாலும் சுவாரசியமாக இருந்தது.
முன் இருக்கையில் நின்று 36 பயணிகளையும் பார்த்து குரு கூறினார் இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு கடவுளை காட்டச்சொன்னால் எப்படி முடியும்? முதலில் உங்களுக்குள் ஒற்றுமையை ஏற்படுத்திக்கொண்டு எவரேனும் ஒரு கடவுளைக் காட்டச் சொல்லுங்கள் நான் காட்ட தயார் என்று கூறினார். குரு வாதத்தில் இருந்து நழுவுவதாக தெரிந்தாலும் ஏகத்துவம் தானே உண்மை என்று உணர்ந்து அனைவரும் அமைதி காத்தனர்.
இது சில வினாடிகள் தொடர்ந்திருக்கும் கடந்த இரண்டு நாட்களாக நடந்த நிகழ்வுகள் காலத்தோடு ஒன்றிணைத்தது ஓர் பயணியின் குரல். நாங்கள் ஷீரடிக்கு வந்ததே பாபா வை பார்க்கதான் ஆகவே எங்களுக்கு பாபா வையே காட்டுங்கள் என்றது குரல் உடனே அனைவர் நாவிலும் பாபா பாபா என்ற சொல் ஓங்கி ஒலித்தது. குரு அவர்கள் சற்றும் தாமதிக்காமல் சரி காட்டுகிறேன் என்றதும் அனைவரும் திகைத்து குருவையே பார்த்தார்கள்.
எனக்கும் ஆவல் கூடியது அனைவரும் குருவை பார்க்கிறார்கள் என்ன நடக்க போகிறதென்று. குரு ஓட்டுனர் பக்கமாக திரும்பினார் தோளில் இருக்கும் துண்டை எடுத்து ஒரே விநாடியில் பகவான் சாய்நாதர் கட்டியிருப்பதை போன்று தலையில் கட்டியவர் நிமிர்ந்து பக்தர்களை பார்த்து இரு கைகளை உயர்த்திய ‘அல்லா மாலிக் ஏக் கை’ என்றார். அந்த நொடி குரு அவர்கள் அனைவர் கண்களுக்கும் “பகவான் சாய்நாதராகவே” காட்சி தந்தார்.
பேரூந்தில் இருந்த அனைவரும் ஆச்சர்யம் கலந்த பரவசத்தில் ஆழ்ந்தனர் ஆனந்த கண்ணீர் விட்டனர் அனைவரும் ஆத்மார்த்தமாக சாய்நாத் மகராஜ்கி ஜே என்று முழக்கமிட்டனர். காட்சிகளை கவனித்த எனக்கு வள்ளுவ பெருமானார் கூறியது நினைவுக்கு வந்தது
“ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம்
கருதி இடத்தாற் செயின்”
(ஏற்ற காலத்தையும் இடத்தையும் அறிந்து ஒரு செயலைச் செய்தால், பூவுலகம் முழுமையையும் வேண்டினாலும் அது தன் கைவசப்படும்) குரு எப்போதும் காலத்தோடு பயணிப்பார். ஆயினும் வெளிப்படுத்தமாட்டார். ஆனால் அன்று மக்களுக்காக ‘காலநாயகனாக’ வெளிப்பட்டார் இதை நேரில் கண்ட 36 நபர்களே சாட்சி.
**********