“ஸ்ரீ தன்வந்திரி ஹோமம்”
“ஸ்ரீ தன்வந்திரி ஹோமம்”
சாந்தி வெங்கடாசலம்.
ஸ்ரீ சத்குரு சாய் பகவானின் பேரருளாலும், ஆசியாலும் நமது குருவும் ,குண்டலினி யோகியும், மௌனோபதேசினியும், வழிகாட்டியுமான யோகி ஸ்ரீராம் பாபாவின் பெரு முயற்சியினால், சாய் தியானலயா ஆத்ம ஞான பீடம் வழங்கும் " சாய் சங்கமம்" நிகழ்ச்சியின் மூன்றாவது மாபெரும் ஹோமம் "ஸ்ரீ தன்வந்திரி ஹோமம்" கடந்த 12 .04 .2026 அன்று சென்னை, அயனாவரம், போலீஸ் மாணிக்கம் தெருவில் அமைந்துள்ள “ஸ்ரீ இராமலிங்க வள்ளலார் திருக்கோவிலி”ல் வெகு சிறப்பாக நடைபெற்றது.
குரு யோகி ஸ்ரீராம் பாபாவின் அறிவுரை மற்றும் ஆலோசனைக்கேற்ப, திருமதி ஜெயந்தி ஸ்ரீராம் அவர்களின் மேற்பார்வையில், சாய் தியானலயா ஆத்ம ஞான பீடத்தின் "ஆத்ம ஞானியர் குழு" நிகழ்ச்சியை வெகு சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள்.
சூரிய பகவானின் தாக்கம் அதிகரிக்கும் இக் காலகட்டத்தில் " ஸ்ரீ தன்வந்தரி ஹோமம்" நடத்த ஏற்பாடு செய்தது மிக பொருத்தமாக இருந்தது. புரோகிதர் திரு. ராகவேந்திரன் அவர்கள் சிறப்பாக அமைத்திருந்தார். மேடையில் ஸ்ரீ மஹாலட்சுமி சமேத ஸ்ரீ மஹாவிஷ்ணு பகவான் தனது பரிவாரங்களுடன் வீற்றிருக்க அருகில் சாய் மகாராஜ் ஆனந்த ஸ்வரூபமாய் அருள்பாலித்தார். கலசகும்பங்களும் யாககுண்டம் எதிரில் தயாராக இருந்தது.
குரு ஸ்ரீராம் பாபா எழுதிய ஆத்ம ஞான பாடலுடன் நிகழ்ச்சி துவங்கியது. குமாரி அமிர்தா மற்றும் அக்சயா இணைந்து பாடலை பாடினார்கள். “காண்பவன் இங்கே இல்லை என்றால்,காண்கின்ற பொருட்கள் ஏதுமில்லை! கடவுள் கர்மா எல்லாமே எண்ணங்கள் தவிர ஏதுமில்லை உள்ளது நீயே என்றுணர்ந்தால், ஆக்கலும் அழித்தலும் நீயேதான் உனக்குள் உள்ளதை உணராது பர வெளிக்குள் தேடுவ தெவ்வாறு! நானார் என்றே தேடுவதே மெய்ஞானம் என்று அறிவாயே!
குணமிகு குருவை பணிவாயே! ஆத்மஞானத்தை நீயும் அறிவாயே!
அறிவால் உலகை ஆள்வாயே உள்ளது நீ என்று தெளிவாயே!”
ஆத்ம ஞானத்தை தேடுவோருக்கு எளிய தமிழில் கிடைத்த அரிய பொக்கிஷம் இப்பாடல். குமாரி அமிர்தா, அக்சயா இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
ஸ்ரீ தன்வந்திரி யாகத்தில் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து சுமார் 150 பேர் நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் கலந்துகொண்டு சிறப்பு செய்தனர். நேரில் வந்து ஹோமத்தை சிறப்பு செய்த அனைவருக்கும் வெயிலுக்கு இதமாக சுவையான நீர்மோர் வழங்கப்பட்டது. யாகம் தொடங்கும் முன்பாக யோகி ஸ்ரீராம் பாபா தன்வந்திரி ஹோமம் பற்றிய சிறு விளக்கவுரை அளித்தார்.
தொடர்ந்து குத்துவிளக்கு பூஜையை துவக்கிவைத்தார் நமது யோக குரு. நம் வாழ்வில் இருளை அகற்றி வெளிச்சம் கொடுக்கும் ஒளி தெய்வம், நமது உள்ளத்தில் இருக்கும் மூடநம்பிக்கை எனும் இருளினை அகற்றி, ஆன்ம சுடரை ஏற்றி வைக்கும் சக்தி வாய்ந்தது.
இத்தீப சுடரை முறைப்படி வழிபடுவது உலகில் உள்ள அனைத்து நல்ல சக்திகளை நமக்குள் ஆவாகனம் செய்வதற்கும், தீய சக்திகளில் இருந்து விடுவித்துக்கொள்வதற்கான எளிய வழியும் ஆகும் என தெரிவித்தார்கள்.
குத்து விளக்கு பூஜை எல்லா ஏற்பாடுகளுடன் இனிதே துவங்கியது. குத்து விளக்கு பூஜை செய்த அனைவருக்கும் பூஜைக்கான பொருள்கள் ஆத்மஞானியரால் வழங்கப்பட்டு சிறப்பாக குறைவின்றி நடத்த ஏற்பாடு செய்திருந்தார் குருஜி அவர்கள். ஒளி பூஜைக்கு என்று நம் குருஜி அவர்களே சிறப்பாக எழுதிய 108 போற்றிகளை கூறி பூஜை செய்வித்தார்.
விளக்கு பூஜை முடிந்ததும் அடுத்த பத்து நிமிடம் நமது குரு அனைவரையும் ஒளி தியானம் மேற்கொள்ள வைத்தது மிகுந்த மன நிறைவை கொடுத்தது. அதன் பின்பு ஸ்ரீ தன்வந்திரி ஹோமத்தை துவங்கினர் புரோகிதர். திரு.ராகவேந்திரன் அவர்கள் , ஸ்ரீ கணபதி தொடங்கி அனைத்து தெய்வங்களையும் கலச கும்பங்களில் ஆவாகனம் செய்வித்து, மந்திரங்கள் கூறி அதற்கு விளக்கமும் தமிழில் கூறி, யாகத்தினை மிகச் சிறப்பாக செய்வித்தார்.
கலந்துகொண்ட அனைவருக்கும் மற்றும் உலக மக்கள் அனைவருக்காகவும் நீள்ஆயுள், நிறை செல்வம், உயர் கல்வி, வான்புகழ், மெய்ஞானம் பெற்று நோயற்ற பெருவாழ்வு வாழ தன்வந்திரி பகவானை வேண்டி மந்திரங்கள் கூறி அனைவருக்கும் தனித்தனியாக நட்சத்திர அர்ச்சனை செய்வித்தார்.
மேலும் அக்னி பகவானுக்கு செய்ய வேண்டிய சிறப்புகளை, மந்திரங்கள் மற்றும் பூஜை பொருட்களின் மூலம் செய்வித்து அக்னி தேவனை குளிர வைத்தார்கள். இறுதியாக பஞ்சாட்சர மந்திரம் கூறி பட்டு வஸ்திரம் சமர்ப்பித்து யாகத்தை சிறப்பாக முடித்து வைத்தார்கள்.
இந்த யாகத்தின் சிறப்பான ஒரு நிகழ்வு புரோகிதர். திரு.ராகவேந்திரன் அவர்கள் நமது யோகி ஸ்ரீராம் பாபாவுடன் சமீப காலமாக சித்தர் பீடங்களுக்கு பயணிக்கும் பொழுது, அங்கு தியானத்தில் இருக்கும் போதெல்லாம் அவருக்கு நம் யோகி ஸ்ரீராம் பாபா அவர்களே அந்தர்யாமியாக தொடர்ந்து தோன்றியதால் குருஜிக்கு சிறப்பு செய்வதற்காக "குரு காயத்ரி" மந்திரமும் "குரு அஷ்டோத்ர 108 நாமாவளியும்" தாமே இயற்றி,அதை “சாய் ஆத்ம ஞான பீடத்”திற்கு சமர்ப்பித்து, குரு பூஜையும் செய்வித்தார்கள்.
கலந்துகொண்ட அனைத்து சாய் பக்தர்களும் புரோகிதருடன் சேர்ந்து குரு காயத்ரி மற்றும் குரு நாமாவளி கூறி ஆனந்தமாக குரு பூஜை செய்து குருவிடம் ஆசி பெற்றது சிறப்பான நிகழ்வு.
தொடர்ந்து அனைவரும் ஹோம குண்டத்தையும், ஸ்ரீ தன்வந்திரி பகவானையும், ஸ்ரீ லட்சுமி சமேத ஸ்ரீ விஷ்ணு பகவானையும், ஸ்ரீ சத்குரு ஸாயி பகவானையும் வலம் வந்து வணங்கி நம் குருவிடம் ஆசி பெற்று பிரசாதங்கள் பெற்று சென்றனர்.
ஹோமம் இனிதே நிறைவடைந்ததும் அனைவருக்கும் சுவையான அன்னதானம் அளிக்கப்பட்டது. அனைவரும் வயிறார உணவருந்தி மனநிறைவுடன் சென்றது திருப்தி அளித்தது.நமது யோகி ஸ்ரீராம் பாபாவின் "குருவைத்தேடி" நூலின் தமிழ் மற்றும் ஆங்கில புத்தகங்கள் மற்றும் நமது நலன் கருதி சாய் ராஜயோக இயற்கை நல்வாழ்வு மையத்தின் மூலம் யோகி ஸ்ரீராம் பாபா, சாய் மகானின் அருளினால் நேரிடையாக தயாரித்து அளிக்கும், அனைத்து நோய்களுக்குமான தீர்வாகும் இயற்கை மூலிகை நிவாரண பொடிகள், சூரணங்கள் மற்றும் ஆயுர்வேத எண்ணெய்களையும் அனைவரும் ஆவலுடன் வாங்கி சென்றார்கள்.
இந்த ஹோமத்தை ஏற்பாடு செய்து, அதன் பலன்களை அனைவருக்கும் கிடைக்க செய்த குருஜி யோகி ஸ்ரீராம் பாபா அவர்களுக்கும், இந்நிகழிச்சிகளின் சூத்ரதாரியான சத்குரு சாய்பகவானுக்கும் கோடானு கோடி நன்றிகளை சாய் அன்பர்களின் சார்பாக மனப்பூர்வமாக தெரிவித்துக்கொள்கிறேன். பக்தர்களின் நலம் விளையும் நம் யோக குரு ஸ்ரீராம் பாபா வின் தன்னலமற்ற அறிவுரைகளையும், போதனைகளையும் ஏற்றுக்கொண்டு அதன்படி நடக்கவும் அவரது சேவை மக்களை சென்று அடையவும் நாம் உற்ற உறுதுணையாக இருக்கவும் உறுதியேற்போம்.
மீண்டும் அடுத்த ஹோமத்தில் அனைவரையும் சந்திக்கின்றேன். குரு வாழ்க குருவே துணை, ஓம் சாய்ராம்.
******