காணிக்கையின் மகத்துவம்
காணிக்கையின் மகத்துவம்
மும்பை தாதர் என்னும் ஊரில் விட்டல் தேஷ்பாண்டே என்ற 12 வயது சிறுவன் தன் தாய், தந்தை, மற்றும் தாத்தாவுடன் வாழ்ந்து வந்தான். விட்டலுக்கு தாத்தா என்றால் அவ்வளவு பிரியம். தாத்தாவும் விட்டல் மேல் பாசமாக இருந்தார்.
வயதான தாத்தாவிற்கு கண் பார்வை மெல்ல மெல்ல மங்கி முழுவதுமாக பார்வை போனது. தாத்தாவிற்கு கண் பார்வை போனது விட்டலுக்கு மிகவும் வருத்தமாகி விட்டது. தாத்தாவின் தேவைகள் அனைத்திற்கும் விட்டலே உதவி செய்து வரலானான். சில மாதங்களுக்குப் பின் கோவிந்தராவ் மான்கர் என்ற பாபாவின் பக்தரை விட்டலின் தாத்தா சந்திக்க நேர்ந்தது.
அவர் தாத்தாவிடம் நீங்கள் சீரடிக்குச் சென்று பாபாவின் தரிசனத்தைப் பெறுங்கள் அவர் மனது வைத்தால் நிச்சயமாக உங்களது கண்பார்வை திரும்பிவிடும் என்றார். அவரின் மேல் தாத்தா மிகுந்த மதிப்பு வைத்திருந்ததால் அவர் கூறியதைப் போன்று சீரடிக்குச் சென்று பாபாவைத் தரிசிப்பது என்று முடிவு செய்தார். ஆனால் அவரது மகனுக்கு நேரமே இல்லை. ஆகையால் சீரடிப்பயணம் தள்ளிப் போய்கொண்டே இருந்தது.
ஒரு கட்டத்தில் விட்டல் நானே உனக்குத் துணையாக சீரடிக்கு வருகிறேன் தாத்தா நாம் இருவருமே சீரடிக்குச் செல்லலாம் என்று கூற குடும்பத்தினருக்கும் அதுவே சரி எனப்பட்டது. எனவே தாத்தாவும், பேரனும் சீரடிக்குப் புறப்பட்டனர்.
1916 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தாத்தாவும், பேரனும் சீரடியை அடைந்தனர். இருவரும் துவாரகாமாயிக்குச் சென்று பாபாவின் பாதங்களில் பணிந்து வணங்கினர். பாபா அவர்களிடம் 6 ரூபாய் தட்சணை கொடு என்று கேட்டார். பாபா கேட்டதும் விட்டல் தனது டிராயர் பையில் கைவிட்டு பணத்தை எடுத்தான். அவனிடம் ஒரு பத்து ரூபாயும், ஒரு ஐந்து ரூபாயும் மட்டுமே இருந்ததனால் விட்டல் பத்து ரூபாயை பாபாவிடம் கொடுத்தான். ஆனால் பாபா அதை ஏற்றுக்கொள்ளாமல், ஐந்து ரூபாயை கொடு என்று வாங்கிக் கொண்டு இன்னும் ஒரு ரூபாய கொடு என்று பிடிவாதம் பிடித்தார்.
விட்டல் மீண்டும் பத்து ருபாயை கொடுக்க முயன்றாலும் பாபா அதை வாங்காமல் எனக்கு ஒரு ரூபாய் தான் வேண்டும் என்று மீண்டும், மீண்டும் பிடிவாதம் பிடித்தார். அதனால் விட்டல் தாத்தாவை அழைத்துக் கொண்டு துவாரகாமாயியின் ஒரு ஓரமாக உட்கார வைத்துவிட்டு, இங்கேயே உட்கார்ந்திருங்கள் நான் சில்லரை வாங்கி வருகிறேன் என்று கூறிவிட்டுச் சென்றான்.
அந்த ஊரில் பத்து ரூபாய்க்கு யாருமே சில்லரை கொடுக்கவில்லை. நீண்டநேரம் சில்லரை கேட்டு அலைந்து களைப்படைந்த விட்டல், மனம் தளர்ந்து அழ ஆரம்பித்தான். அப்போது அவன் முன்னால் ஒரு பெரிய மனிதர் ஒருவர் வந்து ஏன் அழுகிறாய் என்று கேட்டார்.
விட்டல் நடந்தவற்றைக்கூறி, அவனிடம் பாபா மிகவும் பிடிவாதமாக இருப்பதாகக் கூறினான். அதற்கு அந்தப் பெரியவர் அவ்வளவுதானே இதோ நான் உனக்கு சில்லரை தருகிறேன் அதற்காக ஏன் அழுகிறாய் என்று விட்டலிடம் இருந்த பத்து ரூபாயை வாங்கிக்கொண்டு சில்லரை கொடுத்தார்.
விட்டல் அதை வாங்கிக்கொண்டு துவாரகாமாயிக்கு ஓடினான் அங்கு பாபாவின் பாதத்தில் ஒரு ரூபாயை வைத்து வணங்கினான். அவனின் தலையில் கை வைத்து ஆசீர்வதித்த பாபா என் குழந்தையே! எதற்கும் பயப்படாதே, அல்லா நல்லதே செய்வார். இப்போது உனது வேலை வெற்றியடைந்தது என்றார்.
விட்டல், பாபா கூறியதைக்கேட்டு குழம்பினான். நாம் பாபாவிடம் எதற்கு வந்தோம் என்று கூறவேயில்லை. அவரும் நம்மிடம் எதுவும் கேட்கவேயில்லையே என்றபடி அவரை பார்த்தபடியே நின்று கொண்டிருந்தான்.
பாபா மீண்டும் உனது வேலை வெற்றியடைந்தது என்றார். விட்டல் மேலும் குழம்பியபடி தாத்தாவை அமர வைத்த இடத்திற்குச் சென்றான். ஆனால் அங்கு தாத்தாவை காணவில்லை. பயந்து போன விட்டல் தாத்தா, தாத்தா என்று அழைத்தபடி துவாரகாமாயியை சுற்றிலும் தேடினான். ஆனால் தாத்தாவைக் காணவில்லை.
அதன்பிறகு விட்டல் அழுதுகொண்டே சீரடி கிராமம் முழுவதும் சுற்றி வந்தான். தாத்தாவை எங்கும் காணோம். தாத்தா எங்கு சென்றாரோ, கண் பார்வையும் இல்லை. எங்காவது விழுந்து அடிபட்டிருப்பாரோ, என சிந்தித்துக் கொண்டே நின்றிருந்தான்.
அப்போது சில்லரை கொடுத்த அதே பெரியவர் அவனிடம் வந்து, நீ ஏன் மீண்டும் அழுது கொண்டிருக்கிறாய் என்று கேட்க, அவரிடம் தன் தாத்தாவை காணவில்லை என்று கூறினான் விட்டல்.
உடனே அவர் சரி உன் அழுகையை நிறுத்து உன் தாத்தா சாதே வாடாவின் படியில் அமர்ந்திருக்கிறார் போய் பார் என்றார்.
உடனே விட்டல் அங்கு ஒடினான். அங்கு அவனது தாத்தா சாதே வாடாவின் படியில் அமர்ந்து கரும்பு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். விட்டலுக்கு கோபம் வந்துவிட்டது. நான் அமர வைத்த இடத்தை விட்டு ஏன் சென்றீர்கள். கீழே விழுந்து அடிபட்டு காயம் ஏற்பட்டு இருந்தால் என்னாவது. நீங்கள் எப்படி அங்கிருந்து இங்கு வந்தீர்கள் என்றான்.
அதற்கு தாத்தா நீ என்னை அங்கு உட்காரவைத்துவிட்டு நீ போனபின்பு என் உடலில் ஏதோ ஒரு மாற்றம் ஏற்பட்டது. என் கண்கள் மிகத்தெளிவாக தெரிய ஆரம்பித்துவிட்டது. நீ திரும்பவந்து பாபாவிற்கு தட்சிணை அளித்ததை நான் இங்கிருந்து மிகத்தெளிவாகப் பார்த்தேன். அதனால்தான் அங்கிருந்து எழுந்து வாடாவிற்கு வந்தேன் என்றார்.
விட்டல் தன் தாத்தாவிற்கு கண் பார்வை கிடைத்துவிட்டதை அறிந்து மிகவும் ஆனந்தம் அடைந்தான். பாபாவிற்கு 6 ரூபாய் தட்சிணை அளித்த அந்த விநாடியில் இருந்து பாபா முழுமையாக குணமடைந்திருக்கிறார் என்பதையும்,
பாபா நமம்மிடம் தட்சிணை வாங்குவதன் மூலம் நம் கர்மாவை அழித்து நமக்கு நன்மையை செய்கிறார் என்பதையும் விட்டல் நன்கு உணர்ந்து கொண்டான்.
அதன்பின்பு அவர்கள் மகிழ்ச்சியுடன் வீட்டிற்குத் திரும்பினர். பாபாவின் அருளால் தாத்தாவிற்கு கண் பார்வை திரும்பியதை அனைவரும் உணர்ந்து கொண்டு பாபாவிற்கு நன்றியை தெரிவித்தார்கள். ஆனால் விட்டலுக்கு மட்டும் தனக்கு துன்பம் ஏற்பட்ட போதெல்லாம் வலிய வந்து உதவிய அந்த பெரியவர் யார் என்பது மட்டும் புரியவில்லை. உங்களுக்கு புரிகிறதல்லவா?
சாயியை போற்றுவோம்! சகல நன்மைகளையும் பெறுவோம்!