பாபாவின் கோபம்

பாபாவின் கோபம்

பாபாவின் கோபம்

ஒருவருக்கு மற்றொருவர் மேல் உண்டாகும் வெறுப்பு, பகை உணர்ச்சியை முழு சக்தியுடன் வெளியிடுவது கோபம். இது அநாகரீகமானது. இருப்பினும் இது சில நேரங்களில் அவசியமாகிறது. நம் எண்ணங்கள் நிறைவேற இடையூறுகள் ஏற்படும்போது கோபத்தை வெளிக் காட்டுவது அவசியமாகிறது.

ராவணன் நிராயுதபாணியாக நின்ற சமயம் ராமனுடைய இயல்பான கருணை என்னும் குணம், அக்கோபத்தை புறந்தள்ளி “இன்று போய் நாளை வா” என இராவணனை கொல்லாமல் திருப்பி அனுப்பியது. இதே போல் பக்தர்களின் நலனுக்கு பாதகம் விளைவிக்கும் சக்திகள் எழும்போது பாபாவும் கோபத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

அது போன்ற சமயங்களில், மகல்சாபதி, நார்கே, மாதவ்ராவ் போன்ற நெருங்கிய பக்தர்களே பாபாவிற்கு பைத்தியம் பிடித்துவிட்டதோ என்று நினைக்க வேண்டியிருந்தது. ஒருவன் கோபவசப்படும் போது கண்முன் நடப்பதே தெரிவதில்லை. ஆனால் பாபா தன் முன்னால் நிற்கும் பக்தனின் மனதில் எழும் எண்ணத்தினை அறிகிறார். இது ஒரு விஷேச தன்மை. 

இன்னும் பல நேரங்களில் தான் கோபமாக இருக்கும் நேரங்களில் தன் முன்பு பக்தர்கள் வந்தால் பாபா உடனே அமைதி அடைந்து அவர்களுக்கு அருள் பாலிப்பார். அவரே ஒருவன் வாழ்க்கையின் லட்சியமான அமைதியைப் பெற வேண்டுமாணால் கோபத்தை அடக்க வேண்டும் என்று உபதேசிக்கின்றார்.

புரந்தரே என்னும் பக்தரிடம் பாபா கூறுகிறார். யாராவது உன்னை அவமதித்தாலோ, அவதூறாகப் பேசினாலோ, உபத்திரம் செய்தாலோ, அவனுடன் சண்டை செய்யாதே! அதை உன்னால் பொறுக்க முடியாமல் போனால் ஓன்றிரண்டு வார்த்தைகளில் பதிலளித்து விட்டு அவ்விடத்தை விட்டு அகன்றுவிடு.
அதைவிடுத்து சண்டை செய்து பழிக்குப் பழி வாங்கக்கூடாது. 

நீ மற்றொருவருடன் சண்டை செய்யும்போது நான் வெறுப்படைகிறேன். ஒருவன் உன்னிடம் பத்து வார்த்தைகள் பேசினால் நீ ஒரே வார்த்தையில் பதில் சொல்ல வேண்டும். அதுவும் அவசியம் ஏற்பட்டால். அதுவன்றி நீ யாருடனும் சண்டை செய்யக்கூடாது. ஒருவன் மற்றொருவரிடம் கோபத்தை  வெளியிடும் போது என் மனம் நொந்து போகிறது.
ஒருவன் மற்றொருவனின் அவதூறுகளை திட மனதுடன் பொறுத்துக் கொள்வானே யானால் நான் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.

ஒரு பக்தர் இன்னொருவரைப்பற்றி அவர் இல்லாத சமயத்தில் தவறாகப் பேசிக் கொண்டு இருந்தார். அந்த பக்தரை பாபா லெண்டித்தோட்டத்திற்கு அழைத்துச் சென்று, அங்கே திரிந்து கொண்டிருந்த பன்றிகளை சுட்டிக்காட்டி “அங்கே என்ன காண்கிறாய்” என்று கேட்டார். “பன்றி மலத்தை தின்று கொண்டிருக்கிறது” என்றார் பக்தர்.

எவ்வளவு ஆர்வத்துடன் அந்த பன்றி மலத்தை சாப்பிடுகிறது பார்த்தாயா? மனிதன் கழித்த மலத்தை உண்பதில் அதற்கு அவ்வளவு மகிழ்ச்சி. ஆனால் அது நம் கண்களுக்கு அருவருப்பாய் இருக் கிறது. இதுபோவேதான் உன் நடத்தையும் இருக்கிறது.

தன்னுடைய உற்றார், உறவினர், சுற்றத்தார்களையே அவர்கள் இல்லாத போது வசைமாறி பொழிகின்றீர்கள். எத்தனையோ புண்ணியம் செய்ததின் பலனாக ஒருவன் மனிதனாகப் பிறக்கிறான். அதிலும் அதிகமாக குருவை அடைகிறான். அதன்பின்னும் இம்மாதிரி யான செயல்களில் ஈடுபடலாமா? இனி ஒருவரிடமும் குறை காணாதே! உன்னிடம் உள்ள குறைகளையே ஆராய்ந்து பார்! அப்படி செய்தால் உலகம் முழுவதும் உன் வசமாகும். என்றார் பாபா.

மற்றொரு நாள் பாபாவிடம் அனுமதி வாங்காமல் துவாரகாமாயிக்கு முன்பாக ஒரு கொட்டகை அமைக்கும் பணியில் அவரது பக்தர்கள் ஈடுபடுகிறனர். பாபா சாவடிக்கு தூங்கச் சென்றவுடன் இங்கு வேலை ஆரம்பமாகும். கொட்டகைக்கு கால்கள் நடுவதற்காக துவாரகாமாயி சுவற்றில் ஓட்டைகள் போட்டு இரும்புக்கம்பிகளை பதித்து விட்டனர்.

காலையில் வந்து பார்த்த பாபாவிற்கு கோபம் தலைக்கேறியது. இரவெல்லாம் சிரமப்பட்டு பதித்த இரும்புக் குழாய்களை எல்லாம் தன் கைகளாலேயே பிடுங்கி எறிந்து விட்டார். பாபாவின் கோபத்திற்கான காரணம் தான் தாயாக நினைக்கும் சின்ன சிதிலமான கட்டிடமான துவாரகாமாயியில் எளிமையாக வசிக்க நினைக்கிறார். இதை நமக்கு வரும் கோபத்தோடு ஒப்பிட முடியுமா? வசதி வாய்ப்புகள் வரவில்லையே என்ற கோபம் வேண்டுமாணால் வரும்.

சியாமாவை ஒரு முறை பாம்பு கடித்து விட்டது. எனக்கு பாபாவே வைத்தியர் என்று சியாமா ஓடிவந்து மசூதியில் ஏறும் சமயம் பாபா கோபமாக கத்துகிறார். “நீ சுத்த பிராமணன் என்றால் மசூதியின் படிகளில் ஏறாதே, திரும்பிப் போய்விடு” என்று கோபப்படுகின்றார்.

சியாமா பயந்துவிட்டார். எல்லாமே பாபா என்று ஓடி வந்ததற்கு பாபா கொடுக்கும் பரிசா இது என்று பயந்த சியாமா இனி நான் எங்கு போவேன் என்று பயந்தபடி கீழேயே நின்றுவிட்டார். சிறிது நேரத்திற்குப் பின்பு பாபா கோபம் தணிந்தவராக,”மேலே வா சியாமா இறைவன் அன்பானவன், நீ குணமடைவாய்” என்று ஆசீர்வதித்தார். 

பாபா காட்டிய கோபம் தன்மீதன்று தன் உடலில் கலந்துவிட்ட விசத்தின் மீது என்று பிற்பாடு உணர்ந்து கொண்டார் சியாமா.

உயிரற்ற சடப்பொருட்கள் கூட பாபாவின் சொற்களுக்கு கட்டுப்படுகின்றன. என்ற விந்தையை சத்சரிதத்தில் பல இடங்களில் வாசிக்கிறோம். லட்சம் பிறவிகள் எடுத்தாலும் இந்நிலை நமக்குக் கிடைக்குமா? எனவே பாபாவிற்கு வரும் கோபம் காரியக்கார கோபம். பக்தர்களுக்கு நன்மை செய்யும் பொருட்டு வரும் கோபம். எனவே நினைவில் கொள்ளுங்கள். துளியும் கூட நாம் அவரின் கோபத்திற்கு ஆளாகக்கூடாது. கடவுளின் கோபத்தில் இருந்து குரு நம்மைக் காப்பாற்றுவார். குருவின் கோபத்தில் இருந்து கடவுள் கூட காப்பாற்றமாட்டார் என்பதை எப்போதும் நினைவில் வையுங்கள்.

குரு வாழ்க! குருவே துணை!