சீரடி சாயி 105.
105 interesting facts on Shirdi Sai Baba on his 105 Mahasamadhi Year | Sai Dhyanalaya | Sai Maharaj Guruvai Thedi
சீரடி சாயி 105.
கலியுகத்தின் கண்கண்ட கடவுள் பகவான் சீரடி சாயிநாதன் 1918 ஆம் ஆண்டு அக்டோபர் 15 ந்தேதி மகாசமாதி அடைந்தார். இவ்வருடம் 105 வது சமாதி வருடத்தை முன்னிட்டு பாபாவைப்பற்றிய 105 தகவல்கள் உங்களுக்காக தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
1. "சாயி" என்ற பாரசீக சொல்லுக்கு "துறவி" என்று பொருள். "பாபா" என்ற இந்தி சொல்லுக்கு "தந்தை" என்று பொருள்.
2. " அல்லா மாலிக்" என்பது பாபா அடிக்கடி உச்சரித்த வார்த்தை. இறைவன் ஒருவனே எஜமானன் என்பது இதன் அர்த்தம்.
3. சாயிபாபாவின் பூர்வீகம் பற்றி யாருக்கும் தெரியாது. பலர் பல விதத்தில் முயன்றும் ஒருவருக்கும் அவர் தன் பூர்வீகத்தை கூறியதில்லை.
4.பாபா தனது குருநாதராக வெங்குசா என்பவரை குறிப்பிட்டிருக்கிறார்.
5. தன் குருநாதர் தந்ததாக ஒரு செங்கல்லை எப்போதும் தன்னுடன் வைத்திருந்தார். அதுதான் தனது உயிர் என்று அடிக்கடி கூறுவார். அந்தக்கல் உடைந்தபோது, தான் சமாதி ஆகும் காலம் வந்துவிட்டதை உணர்ந்தார்.
6. திடீரென ஒருநாள் 16 வயது பாலகனாக சீரடியில் தோன்றினார். சீரடியின் எல்லையில் இருந்த வேப்ப மரத்தடியில் தியானத்தில் இருந்த நிலையில் மக்கள் அவரைக் கண்டனர்.
7. பீமா என்ற இளைஞனின் உடலில் கிராம தேவதை "கண்டோபா" இறங்கி, இந்த இளைஞன் "உலகின் மகா யோகி" என்று வாக்கு கூறினான்.
8. சாமியாடி, பாபா அமர்ந்திருந்த வேப்பமரத்தடியில் தோண்டிப்பார்க்கக் கூறினான். அங்கே ஒரு சமாதி இருந்தது. அதைவிட ஆச்சர்யம் மூடப்பட்ட பூமிக்குள் இருந்த சமாதியில் நான்கு புறமும் நான்கு அகல் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன.
9. பூமித்தாயின் கருவறையில் இருந்தபடி என் குருவின் சமாதியில் 12 ஆண்டுகாலம் தவம் செய்து கொண்டிருந்தேன். என் குருவின் சமாதி புனிதமானவை. அதை முன்புபோலவே முடிவிட்டு தினமும் சுத்தம் செய்து வணங்குங்கள் என்றார்.
10. குருஸ்தான் என்ற பெயரில் இப்போதும் இந்த சமாதியும், அதன் மேல் இருக்கும், பாபா அமர்ந்திருந்த வேப்பமரமும் வழிபடப்படுகிறது.
11. சாதாரண நாட்களில் பக்தர்கள் குருஸ்தானில் அங்கப்பிரதட்சணம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.
12. சிறிது நாட்களுக்குப்பின் திடீரென அங்கிருந்து மறைந்துபோனார் பாபா.
13. சில ஆண்டுகளுக்குப்பின் குசால்சந்த் என்பவரின் இல்ல மணவிழாவிற்காக, திருமண கோஷ்டி யுடன் மீண்டும் சீரடிக்கு வந்தார் பாபா.
14. சீரடி கிராம தேவதை கண்டோபாவின் பூஜாரியான மகல்சாபதி அவரை முதல்முதலில் கண்டு, " ஆவோ சாயி" என்று வரவேற்றார். அதுமுதல் அவருக்கு சாயி என்ற பெயரே நிலைத்துவிட்டது.
15. சீரடியில் வசித்த பாய்ஜாபாய் என்பவர் பாபாவை தன் சகோதரனாகவே கருதி பலநாட்கள் உணவளித்து வந்தார். பாய்ஜாபாயின் மகன் தாத்யா, சாயிபாபா மகாசமாதி ஆகும் வரை கூடவே இருந்தார்.
16. பாபா சீரடியில் ஒரு பாழடைந்த மசூதியை சுத்தம் செய்து சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக அங்கேயே வாழ்ந்து வந்தார்.
17. அந்த மசூதிக்கு " துவாரகாமாயி" என்று பெயரிட்டார் பாபா. அதற்கு "அன்னையின் இருப்பிடம்" என்று பொருள்.
18. பாபாவை தரிசிக்க அத்தனை பிரபலங்களும் அங்குதான் வருவார்கள். ஒரு மன்னரின் தர்பார் மண்டபத்திற்கு இணையாக அது கருதப்பட்டது. ஆனாலும் பாபா மிக எளிமையாகவே இருந்தார்.
19. பாபா சில நேரங்களில் தனிமையாக இருப்பதற்காக, தான் உருவாக்கிய தோட்டத்திற்கு செல்வார்.
அதன் நினைவாக லெண்டித்தோட்டம் என்ற பெயரில் இப்போதும் சீரடியில் ஒரு தோட்டம் பராமரிக்கப்படுகிறது.
20. பாபா இளமையில் கட்டுடலுடன் இருந்தார். பல இளைஞர்கள் ஒன்று கூடி தூக்கமுடியாத இளவட்டக்கல்லை பாபா ஒருவரே தூக்கியிருக்கிறார்.
21. சாயி துவாரகாமாயியில் அக்னியை வளர்த்து வந்தார். "தூனி" என அதற்கு பெயரிட்டார். அணையாமல் இப்போதும் அது எரிந்து கொண்டிருக்கிறது.
22. தூனியில் இருந்து எடுத்த சாம்பலை "உதி" என்ற பிரசாதமாக பக்தர்களுக்கு அவர் வழங்கினார். பலருக்கு நெற்றியில் இட்டும் இருக்கிறார்.
23. உதியை நெய்யில் கலந்து மருந்தாகக் கொடுத்து பலரின் நோயை குணப்படுத்தியிருக்கிறார். இன்றும் பலரின் நோயை குணப்படுத்தும் அருமருந்தாக உதி பயன்படுகிறது.
24. பாபா மிக மகிழ்ச்சியாக இருக்கும் தருணங்களில் இந்த உதியைப் பற்றி பாடல்களைப் பாடுவதுண்டு.
25. இந்த உதியே இப்போதும் சீரடியில் சாயி பிரசாதமாக தரப்படுகிறது.
26. பாபா துவாரகாமாயியைச் சுற்றிலும் ஏராளமான பூச்செடிகளை வளர்த்து வந்தார்.
27. வாமன் தாத்யா என்ற குயவரிடம் தினமும் இரண்டு சுடாத புது மண்குடங்களை வாங்கி அவற்றில் தண்ணீர் கொண்டு வந்து ஊற்றுவார்.
28. பாபா தண்ணீர் ஊற்றியதும் அந்த மண்குடங்கள் சில்லுகளாக உடைந்து விடும். பக்தர்கள் அதை பிரசாதமாக வீட்டிற்கு எடுத்துச் செல்வார்கள்.
29. சீரடியில் பல ஆண்டுகளாக பாபா யாசகம் பெற்றே உணவு உண்டார். அவர் தங்கள் வீட்டில் வந்து உணவு கேட்கமாட்டாரா என்று பலரும் காத்திருப்பார்கள்.
30. யாசகம் எடுத்துவந்த உணவில் இருந்து முதலில் நாய்களுக்கும், பறவைகளுக்கும் உணவளித்துவிட்டு பிறகு தான் சாப்பிடுவார்.
31. பாபா எப்போதும் ருசி பார்த்து சாப்பிடமாட்டார். ஆனாலும், ரொட்டி, போளி இரண்டும் அவருக்கு பிடிக்கும்.
32. ஒரு சில நாட்களில் உற்சாகமாக இருந்தால் அவரே கிச்சடி, புலாவ் என சமைத்து பக்தர்களுக்கு அன்புடன் பரிமாறுவார். அவர் கையால் உணவுண்ட பக்தர்கள் பேறு பெற்றவர்கள் அல்லவா?
33. ஒரு முறை சீரடியைச்சுற்றி எல்லா கிராமங்களையும் காலரா தாக்கியது. கோதுமையை அரைத்து அந்த மாவை எல்லையில் கொட்டி காலராவை விரட்டினார் பாபா.
34. ஒரு முறை மழையினால் துவாரகாமாயி முழுவதும் சகதியாகிவிட்டது. அதனால் அருகில் இருந்து சாவடியில் சென்று தங்கினார் பாபா. அதிலிருந்து ஒருநாள் சாவடி, ஒரு நாள் துவாரகாமாயி என மாறி மாறி தூங்க ஆரம்பித்தார்.
35. கோணியை விரித்து செங்கலை தலைக்கு வைத்துப் படுத்துக் கொள்வார் பாபா.
36. பிற்காலத்தில் பாபா சாவடிக்குச் செல்லும் நிகழ்ச்சி பெரிய வைபவம் போல் நடத்தப்பட்டது. அலங்கார அணிவகுப்போடு திருவிழாபோல் இன்றும் நடத்தப்படுகிறது.
37. இப்போது சாவடி பளிங்கு மாளிகை போல் பராமரிக்கப்படுகிறது.
38. வியாழக்கிழமைகளில் பாபாவின் திருவுருவப்படம் துவாரகாமாயியில் இருந்து சாவடிக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது.
39. பாபா பயன்படுத்திய பொருட்கள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
40. சாவடியில் பாபா உறங்கிய அறையில்தான் இப்போது பூஜையும், வழிபாடும் நடைபெறுகின்றன.
41. மதபேதம் பார்க்காத மகான் பாபா. ராமநவமி, கோகுலாஷ்டமி, ரம்ஜான், முகரம் போன்ற பண்டிகைகள் அவர் முன் கொண்டாடப்பட்டன.
42. துவாரகாமாயியில் எந்த கடவுளரின் படத்தையும் அவர் வைத்திருக்கவில்லை.
43. முறையாக கல்வி பெற்றவர் இல்லை என்றாலும் பகவத் கீதையை மேற்கோள்காட்டி பண்டிதர்களையே ஆச்சர்யப்படுத்துவார்.
44. பாபா தன் பக்தர்களுக்கு விஷ்ணு சகஸ்ரநாம பாராயணத்தை பிரார்த்தனையின் வடிவமாக போதித்தார்.
45. தான் மகாசமாதி அடைவதற்கு முன்பு வஜே என்ற பக்தரை கூப்பிட்டு தினமும் இராமாயணம் படித்துக் காட்டச் சொன்னார்.
46. பாபா நீளமாக முடிவளர்த்தார். அதன்மீது துணிபோர்த்தி முடிச்சிட்டு இடது காதுக்கு அருகில் தொங்கவிட்டிருப்பார்.
47. கால்களில் பாதணிகள் அணிந்ததில்லை. முதுமையில் பக்தர்கள் வற்புறுத்தியதால் சில காலம் அணிந்து கொண்டார்.
48. சீரடியில் அவர் பாதம் படாத இடம் இல்லை. இப்போது சீரடிக்குச் செல்லும் பக்தர்கள் அனைவரும் மகானின் பாதம் பட்ட இடங்களில் நடக்கும் பாக்கியம் பெற்றவர்களாகிறார்கள்.
49. சீரடிக்கு யார் வரவேண்டும் என்றாலும், எப்பொழுது சீரடியை விட்டு புறப்படவேண்டும் என்றாலும் பாபாவின் அனுமதியுடனே நிகழும். அப்போது மட்டுமல்ல, இப்போதும்.
50. பாபாவின் அனுமதியில்லாமல் சீரடியை விட்டு புறப்பட்டவர்கள் பல துன்பங்களை சந்தித்திருக்கிறார்கள்.
51. பக்தர்கள் தங்கள் விருப்பம் போல் பாபாவை வழிபட்டார்கள். சிலர் பக்திப் பாடல்களைப் பாடினர். சிலர் இசைக் கருவிகளை இசைத்தனர். சிலர் சாமரசம் வீசினர். சிலர் பாபாவின் பாதங்களை கழுவினர். சிலர் ஆரத்தி எடுத்தனர்.
52. அனைத்தையும் அனுமதித்த பாபா தன் நெற்றியில் சந்தனம் பூச மகல்சா பதியை மட்டுமே அனுமதித்தார்.
53. இராதாகிருஷ்ணாயி என்ற பாபாவின் பரம பக்தையே பாபாவிற்கு ஆரத்தி எடுக்கும் வழக்கத்தை ஆரம்பித்து வைத்தார்.
54. இராதாகிருஷ்ணாயியே குரு பூர்ணிமா கொண்டாட்டத்தையும், கோகுலாஷ்டமி, சாயி நாம சப்தாகத்தையும் தொடங்கினார். அதிகாலை காக்கட ஆரத்தி தொடங்கி இரவு ஷேஜாரத்தி வரை எல்லா வழிபாடுகளையும் முறைப்படுத்தினார்.
55. துறவி போல் இருந்த பாபாவின் தோற்றத்தை இராஜயோகி போல் மாற்றியது இராதாகிருஷ்ணாயிதான்.
56. பாபு சகேப் கோபால்ராவ் பூட்டி என்ற பக்தருக்கு கட்டிடம் கட்ட அனுமதி கொடுத்த பாபா "நான் அங்கு வந்து தங்கியிருப்பேன்" என்று உறுதியும் கொடுத்தார்.
57. அந்த கட்டிடத்தின் பூஜையறையில் முரளிதர கிருஷ்ணரின் சிலையை வைப்பதற்கு பாபா அனுமதித்தார்.
58. பூட்டி வாடா கட்டி முடித்ததும் பாபா மகாசமாதி அடைந்தார்.
59.1918 அக்டோபர் 15 விஜயதசமியில் உடல்நலமில்லாமல் இருந்த பாபா பயாஜி என்ற பக்தரின் மடியில் தலை சாய்த்துக்கொண்டு " என்னை பூட்டி வாடாவிற்கு கூட்டிச் செல்லுங்கள். அங்கு நான் அமைதியாக இருப்பேன் என்றார் கூறி சமாதியடைந்தார்.
60. பூட்டியின் மாளிகையில் முரளிதர கிருஷ்ணரின் சிலையை வைப்பதற்கு அமைக்கப்பட்ட இடத்தில் பாபாவை அடக்கம் செய்து சமாதி எழுப்பினார்கள்.அதுதான் இப்போது சமாதி மந்திராக வணங்கப்படுகிறது.
61. பண்டரிபுரத்தில் இருந்த தாஸ்கணு மகராஜின் கனவில் தோன்றிய பாபா, நான் இங்கிருந்து போகிறேன். நீ வந்து என்னை வாசனை மலர்களால் நிரப்பு என்று கூறினார்.
62. தாஸ்கணு உடனே தன் சீடர்களுடன் சீரடிவந்து பாபாவின் சமாதியின்மீது மலர்களால் போர்த்தி, பஜனை செய்தார். ஒருவகையில் சமாதி மந்திர் வழிபாட்டை தொடங்கி வைத்தது அவர்தான்.
63. பாபாவின் சமாதி மந்திரை நிர்வகிக்க நீதி மன்றம் ஒரு கமிட்டியை உருவாக்கியது. அதுதான் பல்வேறு மாற்றங்களுடன் இன்று சீரடி சாயி சமஸ்தான் என வளர்ச்சி பெற்றுள்ளது.
64. "ஸ்ரீ சச்சிதானந்த சத்குரு சாயிநாத் மகராஜ்" என்றுதான் சாயி பாபாவை பக்தர்கள் வணங்குகிறார்கள்.
65. சீரடியின் இதயம் சமாதி மந்திர் இங்குதான் பாபாவின் சமாதியும் அவரின் உருவச்சிலையும் உள்ளன.
66. சமாதி மந்திர் அதிகாலை 4 மணிக்கு திறக்கப்படும். 5.40 முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கின்றனர்.
67. இரவு 10.30 வரை ஆலயம் திறந்திருக்கும்.
68. இராம நவமி, குரு பூர்ணிமா, விஜயதசமி, ஆகியவை இங்கு விஷேசமாக கொண்டாடப்படுகின்றன.
69. முதியோர்களும், மாற்று திறனாளிகளும் சிரமமின்றி பாபாவை தரிசிக்க விஷேசமான சிறப்பு ஏற்பாடுகளை சாயி சனஸ்தான ஏற்படுத்தியிருக்கின்றது.
70. சமாதி மந்திர் வளாகத்திலேயே பாபாவுடன் வாழ்ந்த சாயி அடியவர்களின் சமாதியும் அமைந்திருக்கின்றன.
71. ஆலய வளாகத்திற்குள் இலவச மருத்துவமனையும் நடத்தப்படுகிறது.
72. அங்கு ரத்த தானம் அளிப்பவர்களுக்கு, பாபாவை தரிசிக்க சிறப்பு ஏற்பாடுகளும், பிரசாதமும், சான்றிதழும் தரப்படுகின்றன.
73. ஆலய வளாகத்தின் மேல் 100 நபர்களுக்கு மேல் அமர்ந்து தியானம் செய்யும் வகையில் அமைதியான தியான அரங்கம் உள்ளது.
74. பாராயண ஹாலும், புத்தக விற்பனை நிலையமும் வளாகத்தின் உள்ளேயே அமைந்திருக்கின்றன.
75. காணிக்கை செலுத்த சமாதி மந்திர் எதிரே தனியாக கவுண்டர்கள் உள்ளன.
76. பாபா பயன்படுத்திய பொருட்களை மியூசியத்தில் வைத்துள்ளார்கள்.
77. ஆலயத்துள்ளே சிவன், விநாயகர், சனி பகவானுக்கு தனிச் சன்னதிகள் உள்ளது.
78. சாய் சனஸ்தான் சார்பில் அன்ன தானத்திட்டம் செயல்படுகின்றது. மருத்துவமனைகள், கல்வி நிலையங்களும் செயல்படுகின்றன.
79. சீரடியில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் சாய் பிரசாதாலயா அமைந்துள்ளது. ஒரே நேரத்தில் 1000 பக்தர்கள் அமர்ந்து உணவு உண்ணும் வகையில் பிரம்மாண்டமாய் அமைக்கப்பட்டுள்ளது.
80. பாபாவை தரிசிக்க தினமும் சுமார் 1 லட்சம் பக்தர்கள் வருகின்றார்கள். விஷேச தினங்களில் 4 லட்சத்திற்கு மேல் பக்தர்கள் வருவதுண்டு.
81. சாதாரண நாட்களைவிட வியாழக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் இரண்டு மடங்காக இருக்கும். வியாழன், வெள்ளி ஆகிய இரண்டு நாட்களில் மட்டும் சிறப்பு பூஜை உண்டு
82. பாபா இருக்கும் போது கட்டிய கட்டிடத்தை தற்போது விரிவுபடுத்தி இருக்கிறார்கள். சன்னிதானத்திற்குள் ஒரே நேரத்தில் சுமார் 500 பேர்வரை நின்று தரிசிக்கலாம்.
83. ஆலயத்திற்குள் சாயி பஜன் நடந்து கொண்டே இருக்கும்.
84. துவாரகாமாயியில் பாபா எப்படி உட்கார்ந்திருப்பாரோ அதே இடத்தில் அதே போன்ற ஓவியம் இப்போது வைக்கப்பட்டுள்ளது.
85. துவாரகாமாயியில் ஐந்து இடங்களில் பாபாவின் பாதச்சுவடு பதிக்கப்பட்டுள்ளது.
86. துவாரகாமாயியில் பாபா கால்மேல் கால் போட்டு அமர்ந்திருந்த கல் பாதுகாப்பாய் வைக்கப்பட்டுள்ளது.
87. குருஸ்தானத்தில் ஊதுபத்தி ஏற்றி வழிபடும் பக்தர்களுக்கு நினைத்தது நடக்கும் என பாபா அருளியுள்ளார்.
88. சாவடியை கட்டாயம் தரிசிக்க வேண்டும். சாயிபாபாவின் வழிபாடு இங்கிருந்தே துவங்கின.
89. பாபா வாழ்ந்த காலத்தில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை சாவடிக்கு வருவார். அப்போது இரண்டு ஆரத்திகள் சாவடியில் நடக்கும். மீதி இரண்டு ஆரத்திகள் துவாரகாமாயியில் நடக்கும்.
90. குஜராத்தை சேர்ந்த 18 வயது பக்தருக்கு பாபா கனவில் தரிசனம் தந்தார். அந்தக் காட்சியை அப்படியே ஓவியமாக வரைந்தார் இளைஞன். அந்த ஓவியம் சாவடியில் உள்ளது.
91. உடல்நலமில்லாமல் இருந்தபோது பாபாவிற்கு அளிக்கப்பட்ட சக்ரநாற்காலி இங்கு உள்ளது.
92. மகாசமாதி அடைந்ததும் பாபாவை நீராட்டிய படுக்கையும் இங்குள்ளது.
93. பாபா சாவடியில் உறங்கிய அறையில் தற்போது ஒரு வெள்ளி சிம்மாசனம் வைக்கப்பட்டுள்ளது.
94. பாபா உறங்கிய அறையில் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்ற சம்பிரதாயம் இப்போதும் கடைபிடிக்கப்படுகின்றது.
95. சமாதி மந்திரில் இருக்கும் பாபா சிலைக்கு தினமும் இரவில் கொசு வலை போர்த்தி, பாபா குடிப்பதற்கு தண்ணீரும் வைக்கிறார்கள்.
96. மகாராஷ்டிரா மாநிலம் அகமது நகர் மாவட்டத்தில் உள்ளது சீரடி.
97. அருகில் உள்ள சாய்நகர் இரயில் நிலையத்தில் இறங்கி, மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சீரடிக்கு ஆட்டோவில் செல்லலாம்.
98. சீரடியில் பக்தர்களின் வசதிக்கென விமானப் போக்குவரத்து தொடங்கப் பட்டுள்ளது. சீரடியில் இருந்து 13 கிலோ மீட்டர் தூரத்தில் விமான நிலையம் அமைந்துள்ளது.நாட்டின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் விமானப் போக்குவரத்து நடக்கிறது.
99. சென்னையில் இருந்து சீரடிக்கு தினசரி விமான போக்குவரத்து உண்டு
100. பக்தர்களுக்கு சீரடியில் தங்கும் வசதி, தரிசன வசதி, என எல்லாவற்றையும் ஆன்லைனில் செய்து கொள்ள சீரடி சாய் சனஸ்தான் வசதி செய்துள்ளது.
101. நம்பிக்கை, பொறுமை என்பது சாயிநாதரின் பிரபலமான வாக்குதத்தமாகும்.
102. "எதைப்பிடித்தாலும் இறுக்கிப்பிடி" என்பது பாபாவின் சாஸனாம்ருதப் பொன் மொழியாகும்.
103. என் பக்தர்களிடம், என் சமாதியில் இருக்கும் எலும்புகளும் பேசும் என்பது பக்தர்களுக்கு பாபா அளித்த வாக்குறுதியாகும்.
104. சீரடியின் வாசல்படியை மிதிப்பவன் எவனோ அவனது கர்மவினை அடியோடு அகலும்.
105. நம்பிக்கையுடன் வருபவர்களை பாபா ஒருபோதும் வெறுங்கையுடன் திருப்பி அனுப்பியதில்லை.
ஓம் சாய்ராம்!
எல்லாம் சாயி! எல்லாமே சாயி!
*****