என் பெயர் சக்ர நாராயணா

என் பெயர் சக்ர நாராயணா

சக்ர நாராயணா

என் பெயர் சக்ர நாராயணா, தானா மாவட்டத்தைச் சேர்ந்த போலீஸ் துறையில் பணியாற்றுகிறேன். நான் கிறிஸ்துவ சமயத்தை சார்ந்தவன். பாபா சமாதியான போது கோபர்காமில் போலீஸ் அதிகாரியாக பணியாற்றி வந்தேன். எனக்கு பாபாவிடம் அவ்வளவு நம்பிக்கை கிடையாது. ஆகவே என் மூலமாக எனது மேலதிகாரிகள் பாபாவை கண்காணித்து வந்தனர்.

நானும் பாபாவின் மீது விசுவாசமில்லாமல் அவரை ரகசியமாக வேவு பார்த்து வந்தேன். இருந்தாலும் பாபாவிடம் சேரும் கூட்டம், பாபாவைச்சுற்றி நடக்கும் பொருளாதாரம் ஆகியவற்றை கண்காணித்த எனக்கு அங்கு நடக்கும் அனைத்து உண்மைகளையும் அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிட்டியது. அதனால் அவரின் மீது எனக்கு பெருமதிப்பு உண்டானது.

முதலாவதாக, பாபா பொன், பெண் இரண்டாலும் சற்றும் கவரப்படாதவராக இருந்தார். அவரை தரிசிப்பதற்காக ஏராளமான பெண்கள் வருவார்கள். தங்கள் சிரங்களை அவருடைய பாதங்களில் வைத்து வணங்கி அவர் முன் அமருவார்கள். அவரிடம் எந்த சலனமும் இருக்காது. அவர்களை பாராட்டும் விதமாகவோ, தேவையற்ற நோக்குடனோ வெறும் பார்வையைக்கூட அவர்கள் பக்கம் செலுத்த மாட்டார்.

நான் பல மாதங்களாக அவரை கண் காணித்த வகையில் அவர் சந்தேகத்திற்கு இடமின்றி பற்றற்றவர். பணம் சம்பந்தமாகவும் நாங்கள் ஆச்சர்யப்படும் படிதான் அவரது நடவடிக்கைகள் இருந்தன. மக்கள் அவர்களாகவே வலிய வந்து அவரிடம் பணத்தை கொடுத்தனர். யாராவது கொடுக்கவில்லை என்றால் பாபா அவரை திட்டியதோ, வெறுத்ததோ கிடையாது.

அவர் தினமும் உணவுக்காக பிச்சை எடுக்கும்போதும் இதேதான் நடந்தது. தனக்கு என்ன கிடைத்திருக்கின்றது என்று அவர் கவலைப்பட்டதாகவே தெரிய வில்லை. கிடைத்தவற்றை முழுமையாக வாரி வழங்கிவிடுவார். அவர் இறந்த அன்று அவரிடமிருந்து ரூ.16 ரூபாய்களை மட்டுமே நாங்கள் பறிமுதல் செய்தோம்.
இருப்பினும் அவர் ஒவ்வொரு நாளும் பல நூற்றுக்கனக்கான ரூபாய்களை பட்டுவாடா செய்து வந்தார்.

பல நேரங்களில் அவர் பிறருக்கு கொடுத்த தொகையைவிட அவர் பிறரிடம் இருந்து வாங்கிய தொகை மிகவும் குறைவாக இருந்ததை நானே நேரிடையாகக் கண்டிருக்கிறேன். பணம் பட்டுவாடா செய்ய பாபாவிற்கு அதிகப்படியான பணம் எங்கிருந்து கிடைத்தது. அதீதப் பிரயத் தனம் செய்தும் எங்களால் அவருக்கு பணம் வரும்வழியை கண்டு பிடிக்க முடியவில்லை.

மேலும் எல்லா சமயத்தினரிடமும், அவருடைய அணுகுமுறை மிக கண்ணியமாக இருந்தது. எந்த மதம்,சாதி, சமுதாயத்தைச் சேர்ந்தவராகவோ, அல்லது அந்தஸ்தில் உயர்ந்தவராகவோ, தாழ்ந்தவராகவோ யாராக இருந்தாலும் தரக்குறைவாகவோ, இழிவாகவோ பேச மாட்டார். நான் அவரிடம் சென்றபோது, பாபாவிடம் என்னை அறிமுகப்படுத்தியவர் இவர் கிறிஸ்துவ சமயத்தை சேர்ந்தவர் என்று கூறினார். அதற்கு பாபா, இருந்தால் என்ன? அவன் என் சகோதரன் என்று கூறினார்

பாபாவின் சக்திகளை பலமுறை நேரில் கண்டு அதிசயப்பட்டிருக்கின்றேன். ஒருமுறை என்னுடன் வந்த போலீஸ்காரிடம் பாபா தட்சணை கேட்டார். அவர் என்னிடம் பணம் எதுவுமில்லை என்று கூறினார். உண்மையிலேயே அவரிடம் பணம் எதுவுமில்லை. ஆனால் பாபா அவரிடம் உன் பர்ஸை எடுத்துப் பார் என்றார். அவரும் தனது பர்ஸை எடுத்துப்பார்க்க அதில் ஐம்பது ரூபாய் நோட்டு ஒன்று இருந்தது. 

வியந்துபோன் போலீஸ்காரர், உடனே அதை பாபாவிடம் அளித்தார். பாபவோ எனக்கு அவ்வளவு பணம் வேண்டாம். அதில் இரண்டு ரூபாய் மட்டும் கொடு, விரைவில் உனக்கு அந்தப் பணம் தேவைப்படும் என்று கூறி இரண்டு ரூபாயை மட்டும் பெற்றுக்கொண்டார். 

அடுத்த சில நாட்களில் உண்மையிலேயே பாபா கூறியபடி அவர் ஒரு சிக்கலில் மாட்டிக்கொண்டார். அதிலிருந்து விடுபட அவரிடம் இருந்த தொகையில் முக்கால்வாசி செலவு செய்ய வேண்டியதாகிப் போனது. மீதமிருந்த தொகையை அவர் உடனடியாக பாபாவிடம் சென்று விபரத்தைக்கூறி திருப்பிக் கொடுத்துவிட்டார்.

பாபா சமாதியான பின்பு சமஸ்தானத்தின் சொத்துக்களை அரசாங்கம் முடக்கி வைத்தபோது, நான் அதற்கு உதவியாக இருந்தேன்.சொத்துக்களை யாரிடம் ஒப்படைப்பது என்பதை முடிவுசெய்ய பொது மக்களிடம் இருந்து வாக்குமூலம் பெறப்பட்டு அவற்றின் அடிப்படையில் நீதிபதி இறுதி உத்தரவிட்டார். இதனால் சமஸ்த்தானத்திற்கு ஏற்பட்ட தொந்தரவு நீங்கியது.

******