14 வது சீரடி புனித பயணம்
14 வது சீரடி புனித பயணம்
சொ. அகஸ்டின்
சாய் சொந்தங்கள் அனைவரும் எனது பணிவான வணக்கங்கள். சாய் தியானாலயா ஆத்ம ஞான பீடத்தின் சார்பாக நமது குரு யோகி ஸ்ரீராம் பாபா அவர்களின் தலைமையில் 14 வது சீரடி புனித பயணத்திற்கு, கடந்த 16.06.25 திங்களன்று 24 நபர்களுடன் புறப்பட தயார் ஆனோம். அதன்பொருட்டு அனைவரையும் வரவேற்க நமது குரு முதல் ஆளாக சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் காத்திருந்தார். அனைவரும் சங்கமித்ததும் மதியம் 1.15 மணிக்கு மும்பை எக்ஸ்பிரஸில் புனிதப் பயணம் புறப்பட்டது.
மறுநாள் (17.06.25) காலை 6.30 மணிக்கு donut station சென்றடைந்தோம். எங்களை அழைத்து செல்ல ஹோட்டல் நிர்வாக மேலாளர் திரு. குப்தா அவர்களின் வாகனம் தயார் நிலையில் காத்திருந்தது . அங்கிருந்து புறப்பட்டு 12.00 மணிக்கு கோவையை பூர்வீகமாக கொண்ட ஸ்ரீ சிவநேசன் சுவாமிகளின் சன்னதிக்கு சென்றோம். அவர் பாபாவினால் ஈர்க்கப்பட்டு ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய் ஜெய் சாய் என்ற மகா மந்திரத்தை பக்தர்களுக்கு வழங்கியவர்.
அவரது சன்னதியில் நமது குரு யோகி ஸ்ரீராம் பாபா அவர்கள் பக்தர்களிடம் சத்சங்கம் நடத்தி 20 நிமிடம் தியானம் பயிற்சி அளித்தார். ஸ்ரீ சிவநேசன் சமாதியில் நிலவும் பேராற்றலை தன் ஆற்றலால் ஒவ்வொருவரின் உச்சந்தலை வழியாக உடல் முழுவதும் பரவ செய்து அனைவரையும் பரவச நிலைக்கு அழைத்து சென்றார்.
பக்தர்கள் அனைவரும் தங்களுக்குக் கிட்டிய அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர். மேலும் இரண்டு பைரவர்கள் தியானத்தில் கலந்து கொண்டதையும் அனைவரும் கண்டு களித்தனர் . இந்நிகழ்வு முடிந்ததும் அங்கிருந்து புறப்பட்டு தங்கும் விடுதிக்கு சென்றோம். அங்கு தயாராக இருந்த மதிய உணவை முடித்து விட்டு சிறிது ஓய்விற்கு பிறகு சாய்நாதரை சந்திக்க உற்சாகமாக புறப்பட்டோம் .
எங்கு திரும்பினாலும் எங்கள் செவிகளில் கேட்பது “சாய்நாத் மகாராஜ்கு ஜெய்” என்ற குரல்தான். அவ்ஒலியை கேட்டுக் கொண்டே சாய் நாதர் அருகில் சென்றோம் கருணை கடல் போல் காட்சி அளித்தார் கலியுகத்தின் கண்கண்ட தெய்வம். அதன் நீலத்தையும் ஆழத்தையும் அளவிட முடியாது. மனதார தரிசித்து சமாதி மந்திரின் பின்புறம் பாபா அமர்ந்த வேப்பமரத்தடியில் உள்ள குருஸ்தானை வணங்கி பிரசாதம் பெற்று பிரகாரம் வந்தோம்.
சமாதி மந்திரில் அமைந்திருக்கும் பாபாவின் தொண்டர்களின் சமாதி, மற்றும் பார்க்கவேண்டிய இடங்களை நமது குரு அவர்கள் விளக்கி கூறி ஒவ்வொரு இடமாக அழைத்துச் சென்றார். முக்கியமாக சாயி மந்திர் வளாகத்தில் அமைந்துள்ள தீட்ஷித் வாடா மியூசியத்தில் பாபா உபயோகப்படுத்திய பொருட்களான புகைக்கும் குழாய் , பாபா அணிந்த கபினி , பல்லக்கு , சாய்வு நாற்காலி , குளிக்கும் கல், கோதுமை மாவு அறைத்த திருக்கை என எண்ணற்ற பொருட்களை சேகரித்து வைத்து காட்சி படுத்தப்பட்டுள்ளதை அனைவரும் கண்டு மகிழ்ந்தனர்.
பின்னர் முதல் தளத்தில் அமைந்துள்ள தியான மையத்தில் அனைவரையும் 10 நிமிடம் தியானத்தில் அமர வைத்தார் குரு . அவ்வறையில் உயிரோட்டமாக பாபா சிலை நிறுவப்பட்டிருப்பதை கண்டு மகிழ்ந்தோம். பின்பு மகல்சாபதி இல்லம், பய்யாஜி இல்லம், மாதவ்ராவ் இல்லம், இலட்சுமிபாய் இல்லம், தரிசித்து விடுதிக்கு வந்து இரவு உணவு முடித்து ஓய்வெடுத்துக்கொண்டோம்.
மறுநாள் (18.06.25) காலை சிற்றுண்டி முடிந்ததும் ஆட்டோமூலம் கந்தோபா ஆலயம், பஞ்சமுக கணபதி, சகூரி உபாசினி மகாராஜ் மந்திர், குசால்சந்த் இல்லம், வீரபத்ர ஆலயம், கற்பக விருட்சம், இறுதியாக ஓல்ட் சீரடி ஆகியவற்றை தரிசித்து விடுதிக்கு வந்து மதிய உணவை முடித்துக்கொண்டு சிறிது ஓய்வெடுத்துக் கொண்டோம். பின்பு மாலையில் மீண்டும் சாய்நாதரை தரிசித்து தேவையான பிரசாதம் பொருட்களை வாங்கிக்கொண்டு இரவு தங்கும் அறைக்கு திரும்பினோம்.
புண்ணிய பூமியில் புழங்குவதால் நாட்கள் நகர்வதே தெரியவில்லை அடுத்த பயணமாக 19 ஆம் தேதி வியாழக்கிழமை அன்று காலை 8.00 மணிக்கெல்லாம் சொகுசு வாகனம் காத்திருந்தது. பயணிகள் அனைவரும் புகழ்பெற்ற நகரமான நாசிக் சென்றோம். செல்லும் வழியில் பிரசிக்திபெற்ற சிவத்தலமான திரயம்பகேஸ்வரர் ஆலயத்தில் தரிசனம் செய்தோம்.
அதன்பின்நமது குருவின் ஆலோசனைபடி நாசிக்கில் மூன்று ஆட்டோக்கள் மூலமாக பஞ்சவடி முக்திதாம், லக்ஷ்மன் தபஸ் , சீதாதேவி குகை, காலாராம் ஆலயம், கோராராம், திரிவேணி சங்கமம் , லட்சுமி நாராயணன் ஆலயம், அர்த்தநாரீஸ்வரர் ஆலயம், ஆகிய இடங்களை தரிசித்து விட்டு இரவு விடுதிக்கு திரும்பினோம்.
பகவான் சாய்நாதரை நினைந்து அவர் அனுமதியை பெற்று மறுநாள் (20.06.25) காலை புறப்பட தயாரானோம். அதற்கு முன் காலை 7.00 மணிக்கெல்லாம் வாழும் பாபா என அன்போடு அழைக்கும் அச்சுதானந்த சுவாமிகள் குருவின் அழைப்பை ஏற்று விடுதிக்கு வந்து அனைவரையும் சந்தித்து உதி பாக்கெட் மற்றும் பாபா புகைப்படம் கொடுத்து ஆசிவழங்கிப் புறப்பட்டார்.
அதன்பின் விடுதியில் காலை சிற்றுண்டி முடித்து மதியம் மற்றும் இரவு உணவுகளை பார்சல் செய்துக்கொண்டு காலை 9.00 மணிக்கு சீரடி இரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டோம். அன்று முழுவதும் குருவின் சத்சங்கத்தை கேட்டுக்கொண்டே பயணித்தது மறக்க முடியாது. இடையிடையில் சிறு சிறு எதார்த்த கதைகளை கூறியது இன்னும் சிறப்பாக இருந்தது. மறுநாள் 21.06.25 அன்று காலை 10.00 மணியளவில் சென்னை சென்ட்ரல் இரயில் நிலையம் வந்தடைந்தோம்.
விடுதி ஊழியர்களுக்கும் உணவு மற்றும் வாகனம் ஏற்பாடு செய்த திரு. குப்தா அவர்களுக்கும் இக்குழுவுடன் பயணித்த திரு.கலியன் சாய் அவர்களுக்கும் திரு. கோபால் சாய் அவர்களுக்கும் மனதார நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம் .
இப்புனித பயணத்தை எந்தவித இடையூறுமின்றி மிகச்சிறப்பாக ஆனந்தமாக நடத்திக்கொண்டுத்த பகவான் சாய்நாதருக்கும் நம்முடைய குரு யோகி ஸ்ரீராம் பாபா அவர்களுக்கும் சீரடி புனித குழுவின் சார்பாக மனமார்ந்த நன்றியினை காணிக்கையாக்குகிறோம்.
******