லட்சுமிபாய் ஷிண்டே யேவளா

லட்சுமிபாய் ஷிண்டே யேவளா

லட்சுமி பாய்.

லட்சுமிபாய் ஷிண்டே யேவளா என்ற நகரத்தின் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர். தனது பதின்மூன்றாவது வயதில் துகாராம் பாட்டீலை மணந்து சீரடிக்கு வந்தார். அவருக்கு தாத்யா மற்றும் நானா என்ற இரண்டு மகன்கள் இருந்தனர். லட்சுமிபாயின் கணவர் ஒரு வருவாய் அதிகாரியாக இருந்தார், மேலும் ஆங்கிலேயர்கள் அவருக்கு ‘கிராம அதிகாரி’ என்ற பட்டத்தை வழங்கி இருந்தனர். அவர் மிக இளம் வயதிலேயே விதவையானதால், அனைத்துப் பொறுப்புகளும் அவரது இளம் தோள்களில் விழுந்தன.

லட்சுமிபாய் தன் குழந்தைகளையும், விவசாய நிலங்களையும் கவனித்துக் கொண்டதோடு, தனது கணவருக்குப் பதில் கிராம அதிகாரி பணியையும் மேற்கொண்டார். அவர் மிகக் கவனமாக வரிகளை வசூலித்து அரசாங்க அலுவலகத்தில் அவற்றைச் செலுத்தினார். அவரது அர்ப்பணிப்பைக் கண்டு மகிழ்ந்த ஆங்கிலேயர்கள், அவருக்கு உதவித் தொகை வழங்கினர். லட்சுமிபாய் ஒரு வசதியான பெண்மணியாக இருந்தார், மேலும் அவருக்குச் சொந்தமாக ஒரு வீடும் இருந்தது.

லட்சுமிபாய் இரவும் பகலும் மசூதியில் பணிபுரிந்து வந்தார். பகத் மஹல்சபதி, தாத்யா மற்றும் லட்சுமிபாய் ஆகியோரைத் தவிர, வேறு யாரும் இரவில் மசூதிக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை. ஒருமுறை மாலையில் பாபா, தாத்யாவுடன் மசூதியில் அமர்ந்திருந்தபோது, ​​லட்சுமிபாய் வந்து பாபாவை வணங்கினார். அதற்கு பாபா, "ஓ லட்சுமிபாய், எனக்கு மிகவும் பசிக்கிறது" என்றார். அதற்கு லட்சுமிபாய், "பாபா, சிறிது நேரம் காத்திருங்கள், நான் ரொட்டியுடன் உடனே திரும்பி வருகிறேன்" என்று கூறிவிட்டுச் சென்றார்.

அவள் ரொட்டியையும் காய்கறிகளையும் கொண்டு வந்து பாபாவின் முன் வைத்தாள். அவர் அதை எடுத்து ஒரு நாய்க்கு கொடுத்தார். அப்போது லட்சுமிபாய் கேட்டாள், “என்ன இது, பாபா? நான் அவசரமாக ஓடிவந்து, என் கைகளால் உங்களுக்காக ரொட்டி தயாரித்தேன். ஆனால் நீங்கள் அதில் ஒரு கவளம் கூட சாப்பிடாமல் ஒரு நாய்க்கு எறிந்து விட்டீர்களே! எனக்குத் தேவையில்லாமல் தொந்தரவு கொடுத்துவிட்டீர்கள் என்றாள்.

அதற்கு பாபா,“நீ ஏன் வீணாக வருந்துகி றாய்? நாயின் பசியைத் தணிப்பதும் என்னுடைய பசியைத் தணிப்பதும் ஒன்றுதான்.நாய்க்கும் ஆன்மா இருக்கிறது உயிரினங்கள் வேறுபட்டிருக்கலாம், ஆனால் சில பேசினாலும் மற்றவை ஊமையாக இருந்தாலும், அனைத்தின் பசியும் ஒன்றுதான். பசித்தவர்களுக்கு உணவளிப்பவர், உண்மையில் எனக்கே உணவளிக்கிறார் என்பதை உறுதியாக அறிந்துகொள். இதை ஒரு அடிப்படை உண்மையாகக் கருது.”

இது ஒரு சாதாரண நிகழ்வுதான், ஆனால் அதன் மூலம் பாபா ஒரு மகத்தான ஆன்மீகச் செய்தியைக் கற்பித்ததோடு, அதை அன்றாட வாழ்வில் நடைமுறைப் பயன்பாடாகவும் காட்டினார். அன்று முதல், லட்சுமிபாய் தினமும் பாபாவுக்கு அன்போடும் பக்தியோடும் ரொட்டியையும் பாலையும் படைக்கத் தொடங்கினார். பாபா அதை ஏற்றுக்கொண்டு நன்றியுடன் உண்டார். அவர் அதில் ஒரு பகுதியை எடுத்துக்கொண்டு, மீதியை ராதாகிருஷ்ண மாயிக்குப் பிரசாதமாக அனுப்பினார்.

துவாரகாமாயிலிருந்து தாஜின் கான் தர்காவுக்குச் செல்லும் தெருவின் இடதுபுறத்தில் லட்சுமிபாயின் வீடு உள்ளது.

சாய் பாபா தனக்கு அளித்த 9 நாணயங்களுடன் லட்சுமிபாய்
1918-ஆம் ஆண்டு விஜயதசமி அன்று, பாபா மகாசமாதி அடைவதற்கு முன்பு, தம் சட்டைப்பையில் கையை விட்டு, முதலில் 5 ரூபாயும், பின்னர் 4 ரூபாயும் என மொத்தம் 9 ரூபாயை அவளுக்குக் கொடுத்தார். இது ஒன்பது வகையான பக்திகளைக் குறிப்பதாக இருந்தது (அவை: சிரவண, கீர்த்தண, ஸ்மரண, சரண சேவண, அர்ச்சண, வந்தண, தாஸ்ய, சக்ய மற்றும் ஆத்ம நிவேதன). (சாய் சத்சரிதை அத்தியாயங்கள் 21 மற்றும் 42).

ஒன்பது நாணயங்களுக்கான மற்றொரு விளக்கம் பின்வருமாறு இருக்கலாம். எண் 5 என்பது 'பஞ்ச இந்திரியங்களைக்' குறிக்கலாம். அவை "கர்மேந்திரியங்கள்" மற்றும் ஐந்து "ஞானேந்திரியங்கள்" உள்ளன . இந்த இந்திரியங்கள் இன்பத்திற்கும் துன்பத்திற்கும் காரணமாக அமைகின்றன. நான்கு ரூபாய், மனஸ், புத்தி, அஹம் மற்றும் சித்தம் ஆகியவற்றை உள்ளடக்கிய "அகங்காரச் சிக்கலையும்" குறிக்கலாம். 

மேற்கூறியவை பாபாவின் கைகளில் வைக்கப்பட்டாலோ அல்லது அவரது பாதங்களில் சமர்ப்பிக்கப்பட்டாலோ, அது  "முழுமையான சரணாகதி" ஆகும். லட்சுமிபாய் மூலம், நம்மை முழுமையாக அவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பாபா நமக்குக் கற்பித்தார்.

லட்சுமிபாய் ஷிண்டே 1963 ஜூன் 2 ஆம் தேதி சமாதி அடைந்தார். ஷேஜ் ஆரத்திக்குப் பிறகு அவர் அமைதியாக உயிர் நீத்தார். தனது மறைவுக்கு முன்பு, புனித சாய் சத் சரித்திரத்தின் 42 ஆம் அத்தியாயத்தை உரக்கப் படிக்குமாறு தனது உறவினர்களிடம் அவர் கேட்டுக்கொண்டார். 

அவரது சமாதி அவரது வீட்டிற்கு எதிரே உள்ளது. அங்கு ஒரு சிறிய சன்னதி உள்ளது, அதில் லட்சுமிபாயின் சிலை நிறுவப்பட்டுள்ளது. அந்தச் சிலைக்கு முன்னால், ஒரு கண்ணாடிப் பெட்டியில் ஒன்பது நாணயங்கள் வைக்கப் பட்டுள்ளன. லட்சுமிபாய் ஷிண்டேயின் வம்சத்தினர் இன்னும் அந்த வீட்டில் வசித்து வருகின்றனர். சீரடிக்கு புனிதப்பயணம் மேற்கொள்ளுபவர்கள் அவசியம் லட்சுமிபாய் இல்லத்தையும் சென்று  தரிசிக்கவும்.

********